Thursday, February 2, 2012

இதழ்கள், மின்னிதழ்கள்


Wednesday, February 1, 2012

24 மனை தெலுங்கு செட்டியார் வாழ்க்கைச் சடங்குகள்

மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை, ஏன் இறந்த பின்பு கூட நடைமுறைப்படுத்தப்படும் சடங்குகளை 'வாழ்க்கைச் சடங்குகள்' என்கிறார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் கருவுறுதல், பிறப்பு, பூப்பு, திருமணம், இறப்பு என்று மனிதர்களின் வாழ்க்கைச் சுழற்சிகளில் செய்யப்படும் சடங்குகள் வாழ்க்கை வட்டச் சடங்குகள் எனப்படும். உதாரணமாக கருவுறுதல், பிறப்புச் சடங்குகள், பூப்புச் சடங்குகள், திருமணச்சடங்குகள், ஈமச்சடங்குகள் போன்ற பல தரப்பட்ட சடங்குகள் சமூகத்திற்கு சமூகம் வேறுபட்டுக் காணப்படுகின்றது. அவற்றில் 24 மனை தெலுங்குச்செட்டியார் பின்பற்றும் சடங்குகள் பின்வருமாறு:

வளைகாப்புச் சடங்கு


பெண் மணமாகி கருவுற்ற பின்பு அந்த பெண்ணுக்கு ஐந்து, ஏழு அல்லது ஒன்பதாவது மாதத்தில் தாய் வீட்டால் நடத்தப்படும் சடங்கு வளைகாப்புச் சடங்கு என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் பெண்ணின் புகுந்த வீட்டில் அல்லது மண்டபத்தில் வைத்து வளைகாப்புச் சடங்கு நடத்தப் படுகிறது. இந்தச் சடங்கு கட்டுச் சோறு கட்டுதல், சோறாக்கிப் போடுதல், சீமந்தம் செய்தல் என்று 24 மனையார் குடும்பங்களில் அழைக்கப்படுவதுண்டு. பெண்ணின் தாய் வீட்டார் தம் உறவுகளுடன் பல்வேறு சித்திராண்ண உணவு வகைகளைச் சமைத்து மாப்பிள்ளையின் வீட்டிற்கு எடுத்துச் சென்று பெண்ணுக்கு நலங்கு வைத்து வளையல் அணிவித்து வாழ்த்துவது வளைகாப்பு காப்புச் சடங்காகும். வளைகாப்பு நடத்திப் பிள்ளைப் பேற்றிற்காகப் பெண்ணைத் தாய் வீட்டிற்கு அழைத்து வருவர். பிள்ளைப் பேறு என்பது பெண்ணிற்கு மறுபிறவி என்பார்கள். கருவுற்ற பெண்ணுக்கு சுகப் பிரசமாகி, பிறக்கப் போகும் குழந்தை நோய் நொடியின்றி தாயும் சேயும் நலமுடன் புகுந்த வீடு திரும்ப வேண்டும் என்பதற்காக வளைகாப்புச் சடங்கு நிகழ்த்தப்படுகிறது.

பிறப்புச் சடங்குகள்

பிறப்புச் சடங்கில் 1. சேனை தொடுதல், 2. தொட்டிலிடுதல், 3. பெயர் சூட்டல் 4. சோறு ஊட்டல் 5. காதணி விழா.  என்பன 24 மனைத் தெலுங்கு செட்டியார் இனத்தில் முக்கியத்துவம் பெறுபவையாகும்.

1.    சேனை தொடுதல்

சேனை தொடுதல் என்பது சேய்+நெய்+தொடுதல் என்பதன் திரிபு ஆகும். இந்த இனத்தில் குழந்தை பிறந்தவுடன் வீட்டுப் பெரியவர்களை புடைசூழ எல்லோராலும் குறிப்பிட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவர் (பெரும்பாலும் குடும்பப் பெரியவர்கள்) குழந்தையின் நாவில் இனிப்புக் கலந்த பால் நெய் தொட்டு வைக்கும் சடங்கையே சேனை தொடுதல் என்று பெயரிட்டு அழைக்கிறார்கள். சேனை என்பதன் பொருள் இனிப்பான பால் திரவம் ஆகும். இந்தச்சடங்கு ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் நிகழ்வதாகும். குழந்தைக்கு சேனைப்பால் வைப்பவரின் குணநலன்கள் அமையும் என்பது 24 மனைத் தெலுங்கு செட்டியார்களின் நம்பிக்கை.

2.    தொட்டிலிடுதல்

பிறந்த குழந்தையை, தீட்டுக் கழித்த பிறகு, முதன்முதலில் தொட்டிலில் இடுவது இந்த இனத்தவரால் ஒரு சடங்காகவே மேற்கொள்ளப்படுகிறது. இதில் முக்கிய பங்கு வகிப்பவர் குழந்தையின் தாய் மாமன் ஆவார். இவர் தொட்டில் துணி, தொட்டில் கம்பு, தொட்டில் கயிறு, புத்தாடை ஆகியவற்றைக் தன சகோதரிக்காகக் கொண்டு வந்து தொட்டில் கட்டி அதில் குழந்தையைக் கிடத்தி மூன்று முறை ஆட்ட வேண்டும். தொட்டிலிடுதல் பெரும்பாலும் பெண் புகுந்த வீடுகளில் நடைபெறும். பெண் தாய் வீட்டில் பிரசவம் முடிந்து புகுந்த வீடு திரும்பியதும் இது நடப்பது உண்டு.

3.    பெயர் சூட்டல்

குழந்தைக்குப் பெயர் வைத்தல்: குல தெய்வக் கோவில்களில் நடைபெறும். சடங்கு எனலாம். குழந்தைக்கு ஜாதகப்படி குறித்த பெயரை குலதெய்வக் கோவிலில் எல்லா நெருங்கிய உறவுகளையும் அழைத்து அவர்கள் முன்னிலையில் இடுகிறார்கள். சில குடும்பங்களில் ஒரு ஆண்டு முடிந்ததைக் குலதெய்வக் கோவில்களில் பொங்கலிட்டும் கொண்டாடுகிறார்கள்.

4.    சோறு ஊட்டல்

முதன்முதலாக குழந்தைக்குச் சோறு ஊட்டல் சடங்கு கூட குலதெய்வக் கோவிலிலோ அல்லது இஷ்ட தெய்வக் கோவிலிலோ நடைபெறுவதுண்டு.

5.    காதணி விழா

குலதெய்வக் கோவில்களில் பிறந்த குழந்தைக்கு முதல் முடி எடுத்துக் காது குத்தும் சடங்கு இந்த இனத்தவரிடையே சிறப்பிடம்பெறும் சடங்காகும். 24 மனைத் தெலுங்கு செட்டியார் இனத்தில் அவரவர் குலதெய்வக் கோவில்களில் நடைபெறும் சடங்கு இது. குலதெய்வக் கோவில்களில் பெரிய கும்பிடு என்ற திருவிழா பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படும். முடி எடுத்தல் மற்றும் காத்து குத்தல் சடங்குகள் இந்த திருவிழாவின் போதுதான் நடைபெற வேண்டும் என்பது விதி. ஆனால் பல காரணங்களை முன்னிட்டு இவ்விதி தளர்த்தப்பட்டு வருகிறது. காது குத்துதல் என்பது கருவில் உண்டான பாரம்பரியக் குறைகளை நீக்குவதற்காக இச்சடங்கு செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. தீமை தரும் ஆவிகளிடமிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கக் காதில் துளையிட்டு தங்க ஆபரணம் அணிவிப்பதாக நம்பப்படுகிறது.

தாய் மாமன் இந்த சடங்குகளில் முக்கிய பங்கு வகிக்கிறார். தன சகோதரி குடும்பத்தில் உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் இவர் மடியில் அமர வைத்து முடிஎடுத்துக் காத்து குத்துவது மாற்ற முடியாத விதி எனலாம். தாய் மாமன் புத்தாடை மற்றும் சீர்செனத்திகளுடன் வந்திருந்து காதுகுத்து விழாவை சிறப்பிப்பார்.

பூப்புச் சடங்கு

பெண் குழந்தைகளின் பூப்பெய்தும் நிகழ்வு 24 மனையாரிடையே மிகவும் மகிழ்வுடனும் சீர் வரிசையோடும் நடைபெறும் சடங்காகும். பெண் உடல் ரீதியாக (தாய்மைக்கு உரிய) கன்னித் தன்மையை அடையும் நிகழ்வே பூப்படைதல் ஆகும். பெண் பூப்பெய்திய உடன் பெண்ணிற்கு நிகழ்த்தப்படும் சடங்கே பூப்புனித நீராட்டு சடங்கு என்று அறியப்படுகிறது. கிராமங்களில் சடங்கு என்னும் சொல் பூப்புச் சடங்கையே சுட்டும்.

இந்தச் சடங்கிலும் பூப்படைந்த பெண்ணின் தாய்மாமன் பூப்புச் சடங்கில் தாய் மாமன் தன சகோதரியின் பெண்ணிற்குப் பச்சை ஓலை பந்தல் கொண்டு குச்சில் கட்டுதல் அல்லது குடிசை கட்டுதல் என்பது மரபு. வீட்டை விட்டு ஒதுக்கி வைத்த பின் இந்தப் பெண் இக்குடிசையில் பதினாறு நாட்கள் தங்க வேண்டும். பெண் குடிசையில் தங்கியிருக்கும் நாட்களில் வருங்காலத்தில் அவள் மணமுடித்து கருவுற்ற பின் குழந்தையைத் தாங்கும் வலிமையைப் பெறவேண்டும் என்பதற்காக ஊட்டச் சத்தான உணவு வகைகளை உறவினர்கள் கொடுத்து வலுச்சேர்ப்பதுண்டு. தங்கள் பெண் இல்வாழ்க்கைக்கு உரிய தகுதியைப் பெற்ற நிலையை உறவினர்களுக்கு தெரிவிப்பதே பூப்புச் சடங்கின் குறிக்கோள் எனலாம். பதினாறு நாட்கள் கழித்து அப்பெண் திருமபவும் வீட்டுக்கு அழைக்கப்படுவாள். குறிப்பிட்ட நல்ல நாளில் வீட்டில் அல்லது மண்டபத்தில் சுமங்கலிப் பெண்கள் ஒன்று கூடி மஞ்சள் கலந்த நீரால் பூப்படைந்த பெண்ணைக் குலவை இட்டுப் புனித நீராட்டுவது பூப்புனித நீராட்டுச் சடங்காகும்.

Thursday, January 26, 2012

24 மனை தெலுங்குச்செட்டியார் வரலாறு

தமிழ் நாட்டில் வணிகர் தலைவர்களின் வணிக சேவையை மெச்சும் வண்ணம் சோழ, பாண்டிய அரசர்கள் அளித்த பட்டம் எட்டி என்பது.

"எட்டி குமரன் இருந்தோன் தன்னை" (மணிமே.4.58).

எட்டுதல் - உயர்தல். எட்டம் - உயரம். மரூஉப்புணர்ச்சி. எட்டி - செட்டி.

இன்றும் பல்வேறு வாணிக வகுப்பார், செட்டிஎன்பதைப் பட்டமாக மட்டுமன்றி குலப்பெயராகவுங் கொண்டுள்ளனர். அவர்களில் 24 மனை தெலுங்கு செட்டியார் இனமும் ஒன்று. தெலுங்கு பேசும் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் ஆந்திராவிலிருந்து 14 மற்றும் 15 ஆம் நூற்றாண்டின் மத்தியில் தமிழ்நாட்டிற்குக் குடி பெயர்ந்தனர்.
 
வடுகர்

வளஞ்சியர் என்ற வாணிகக் குழுவினைப்பற்றி முதலாம் இராசேந்திர சோழன் காலத்திய காட்டூர்க் கல்வெட்டு ஒன்று விரிவான செய்திகளைக்கூறுகின்றது. இவர்கள் குழுவில் செட்டிகள், செட்டிப் பிள்ளைகள் ... ஆகியவர்களும் சேர்ந்திருந்தனர். தனம் வடுகர் என்போரின் மூதாதையரே வளஞ்சியர் என்று மற்றொரு சோழர் கல்வெட்டிலிருந்து  அறியலாம். சங்ககாலத்தில் வடுகர் இன மக்கள் வேங்கடமலைக்கு வடக்கில் வாழ்ந்துவந்தனர். “வடுகர்” என்றாலே வடக்கிலிருந்து வந்தவர்கள் என்று பொருள்.

"கடுங்குரற் பம்பைக் கதநாய் வடுகர்" (நற். 212 : 5),

வணிகர்கள் (சாத்தர்கள்)

வணிகப் பொருள்கள் சாத்து எனப்படும். வணிகப் பொருள்களை வண்டிகளிலும், பொதி எருதுகளின் மீதும் ஏற்றிச் சென்றுள்ளனர். அவைகளின் மூட்டைகள் பொதி என்றும், பாக்கம் என்றும் அழைக்கப்பட்டன. அதனால் வணிகர்கள் சாத்தர் எனப்பட்டனர்.  வணிகர்கள் ஓர் ஊருக்குப் பொருள்களைக் கொண்டு சென்று விற்பதுடன், அங்கு கிடைக்கும் பொருள்களைத் தம் ஊர்க்கும் வாங்கி வந்தனர். எனவே அவர்கள் இருவழி வணிகமும் செய்தனர்.  "சாது செட்டி" என்ற பெயர் கூட "சாத்து" என்ற சொல்லையொட்டி தோன்றியிருக்கலாம். 

வணிக குழுக்கள் (Merchants Guild)

பண்டைய சோழ நாட்டில் பெரும் வணிக குழுக்கள் இருந்தன. இந்த வணிகர்கள் சாத்து (கூட்டம்)  பெரும் செல்வாக்குடன் திகழ்ந்தது. செட்டியார்கள் அனைவரும் முதலில்(சிலப்பதிகாரக் காலத்தில்) தனவணிகர் என்றே அழைக்கப் பட்டனர். இவர்களே புதிய அரசனின் சிரசில் மணிமுடியைச் சூடும் தனிமதிப்பைக் கொண்டிருந்தனர். காலப்போக்கில் வணிகர் மரபில் பெண்கள் குறைந்த போது வெள்ளாளர்களில் பெண் எடுத்தனர்.
கல்வெட்டுகளில் பல்வேறு வணிகக் குழுவினர் பெயர்கள் காணப்படுகின்றன. நானாதேசி, திசையாயிரத்து ஐநூற்றுவர், மணிக்கிராமத்தார், ஆயிரவர், பன்னிரண்டார், இருபத்துநான்கு மனையார், நகரத்தார், வளஞ்சியர், அஞ்சு வண்ணம், சித்திரமேழிப் பெரியநாடு என அவர்கள் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன.

வணிக பெருவழிகள்

வணிக மையங்களை இணைப்பவை பெருவழிகள் (trunk roads). திருவிடந்தை குறித்த கல்வெட்டில், "வடுகப் பெருவழி' எனும் பெயர் வந்துள்ளது. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த  கல்வெட்டில் வணிகர் குழுவினர் நிர்வாகித்து வந்த காவல் வீரர்களைப் பற்றிய குறிப்பு வருகிறது. சோழ சக்ரவர்த்தி முதற் குலோத்துங்க சோழன் (1070-1120) காலத்தில் வணிகர்கள் படைவீரர்களையும், தளபதிகளையும் தங்களுடைய காவற்படையினராக அமர்த்தி ஊதியம் வழங்கி  பராமரித்தார்கள். இது போன்ற பாதுகாப்பு அளிக்க அரசு சுங்க வரி கூட வசூலித்ததாம்4. வணிகப் பெருவழிகளான  காரைக்கால் பெருவழி, தஞ்சாவூர் பெருவழி, கொங்கர் பெருவழி, பெண்ணாற்றுப் பெருவழி (இது தென்பெண்ணை ஆற்றை ஒட்டி, தகடூரில் இருந்து திருக்கோவிலூர் வரை இருந்திருக்கிறது.), இராசகேசரிப் பெருவழி (இது கொங்கு நாட்டில் இருந்து சேரநாட்டுக்குச் செல்லும் பாலக்காட்டுக் கணவாயை ஒட்டியது). மகதேசன் பெருவழி (சேலம் மாவட்டம் ஆறுகழூரில் இருந்து காஞ்சிபுரம் வரை சென்றது.) போன்ற பெருவழிப்பாதைகளில் எரி வீரர் படை வணிகர்களுக்கு பாதுகாப்பளித்தது.

விஜயநகரப் பேரரசு

பதிமூன்றாம் நூற்றாண்டில் நிகழ்ந்த மாலிக் காபூரின் படையெடுப்பு தென்னகத்தின் வலிமை வாய்ந்த சேர, சோழ, பாண்டிய பேரரசுகளை எல்லாம் அழித்து தென்னிந்தியாவை, குறிப்பாக தமிழகத்தையே சீர்குலைத்து நிலைகுளையச் செய்ததது. வழிபாட்டுத் தளங்கள் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டன. இடிபாடுகளும் சுடுகாடுகளும் மட்டும் மிஞ்சியது. மீண்டது. மாலிக் காபூர் விட்டுச்சென்ற தளபதிகள் சிற்றரசர்களாக மாறி கொள்ளையடித்தலையே ஆட்சியாகச் செய்துவந்தனர்.  பதினான்காம் நூற்றாண்டில் முகலாய படையெடுப்பு மற்றும் தில்லி சுல்தான்களின் காட்டாட்சி  இந்துக்களிடையே ஒற்றுமையை  ஏற்படுத்தியது. இதன் காரணமாக இந்துக்கள் ஒன்றாக இணைந்து விஜயநகரப் பேரரசு என்ற புதிய பேரரசை உருவாக்கினர். ஏற்பட்டது. பதினான்காம் நூற்றாண்டில் வலிவிழந்த சேர, சோழ, பாண்டிய  பேரரசுகளின் வீழ்ச்சி காரணமாக, தமிழ்நாடு விஜயநகரப் பேரரசின் ஒரு அங்கமாக மாறியது.

இதனை தொடர்ந்து இந்தியாவின் மற்ற பகுதிகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் தமிழ்நாட்டின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைத் தோற்றுவித்தன.  பல படையெடுப்புகளுக்குப்  பின்பு விஜயநகரப் பேரரசு தம் ஆட்சியை தென்னிந்தியா முழுவதும் கைப்பற்றி விரிவு படுத்தியது. தமிழகப் பகுதிகளை வேலூர், சந்திரகிரி, தஞ்சை, மதுரை திருவதிகை (செஞ்சி), என ஐந்து மண்டலங்களாகப் பகுக்கப்பட்டு ஒவ்வொன்றுக்கும் ஒருமண்டலேசுவரரை நியமித்தனர்.

மகாமண்டலேசுவரருக்குக் கீழ்ப்பட்டிருந்த இராஜ்யங்கள் எனப்பட்ட பிரிவுகளுக்கு நாயக்கர் என்ற பதவியில் உள்ளூர் ஆளுநர்களை நியமித்து பேரரசின் பல்வேறு பகுதிகளை ஆட்சிச் செய்யுமாறு விஜயநகரப் பேரரசு ஏற்பாடு செய்தது.

கம்பளதார், நாயக்கர்

விஜயநகரப் பேரரசில் நாட்டை அல்லது பாளையத்தை (குறுநிலத்தை) நிர்வாகித்தவர்கள்  நாயக்கர் என்று அழைக்கப்பட்டனர். நாயக்கர் என்பது ஒரு பட்டமாகும். கம்பளதார்களின் உதவியால் தான் தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி வந்தது. அதனால் தான் பெரும்பாலான பாளையம் இவர்களால் ஆளப்பட்டுள்ளது. கம்பளத்தார்கள் இல்லை என்றால் தமிழ் நாட்டில் இத்துணை காலம் விஜயநகர பேரரசு, நாயக்கர் ஆட்சி அமைந்து இருக்காது.

காப்பு, பலிஜா, கவரை, கம்மா இனத்தவர்கள்

ஆந்திர மாநிலத்தின் வரண்ட பாறைகள் சூழ்ந்த ராயலசீமா என்ற நிலப்பகுதியில் ஆடு மாடு மேய்த்து வாழ்ந்தவர்களே இந்தக்  கம்பளத்தார்கள். கம்பளத்தார் என்பது ஒரு இடப்பெயர். இவர்கள் ஆந்திராவில் மிக பெரிய சமுதாயமான காப்பு (சாதி) இனத்தவர்களின் கிளை சாதியினராக கருதபடுகிறார்கள். பேரரசர் கிருஷ்ணதேவராயர் இந்த காப்பு இனத்தை சேர்ந்தவரே. காப்பு என்ற இனத்திலிருந்து கிளைவிட்டது தான் பலிஜா இனம். பலிஜா இனத்திலிருந்து கொல்லவார், தொக்லவார், கம்மா மற்றும் கவரை இனங்கள் கிளைத்தன. பலிஜா இனத்தவர்கள் நாய்டு மற்றும் செட்டி என்ற பட்டங்களைப் பெற்றனர்.

செட்டி பலிஜா

பலிஜா இனத்திலிருந்து செட்டி பலிஜா என்னும் வணிகர்களும், நாயுடு பலிஜா படைத்தலைவர்களும்  தோன்றினர். செட்டி பலிஜாக்கள் செல்வாக்கு மிகுந்த தனவணிகர்களாக உருவெடுத்தனர். இவர்கள் “தேசாதிபதி“ என்றும் பெயர் பெற்றனர். விஜயநகரப் பேரரசு தமிழ்ப் பகுதிகளில் வேர்விட்டு நிலைபெற்ற இவ்விரு நூற்றாண்டுகளிலேயே பெரும் எண்ணிக்கையில் தெலுங்கு பேசும் பல இனத்தை சேர்ந்த மக்கள் தமிழ்நாட்டுக்கு இடம் பெயர்ந்தனர். புலம் பெயர்ந்த செட்டி பலிஜாக்கள் கொங்கு நாட்டில் வணிகம் செய்து வந்தனர். தகுந்த ஆதாரங்கள் கிடைக்காத நிலையில்,  செட்டி பலிஜாக்கள்  இனத்திலிருந்து தான் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் தோன்றி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 

 பலிஜா இனத்திலிருந்து செட்டி பலிஜா என்னும் வணிகர்களும், நாயுடு பலிஜா என்னும் படைத்தலைவர்களும் தோன்றினர். செட்டி பலிஜாக்கள் செல்வாக்கு மிகுந்த தனவணிகர்களாக உருவெடுத்தனர். இவர்கள் “தேசாதிபதி“ என்றும் பெயர் பெற்றனர். விஜயநகரப் பேரரசு தமிழ்ப் பகுதிகளில் வேர்விட்டு நிலைபெற்ற இவ்விரு நூற்றாண்டுகளிலேயே பெரும் எண்ணிக்கையில் [[தெலுங்கு]] பேசும் பல இனத்தை சேர்ந்த [[திராவிடர்|திராவிட]] மக்கள் தமிழ்நாட்டுக்கு (மதுரை, தஞ்சாவூர்,செஞ்சி போன்ற பகுதிகளுக்கு) இடம் பெயர்ந்தனர். புலம் பெயர்ந்த செட்டி பலிஜாக்கள் கொங்கு நாட்டில் வணிகம் செய்து வந்தனர். தகுந்த ஆதாரங்கள் கிடைக்காத நிலையில், செட்டி பலிஜாக்கள் இனத்திலிருந்து தான் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் தோன்றி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
     
இவர்கள் வீட்டில் தெலுங்கு மொழியில் பேசினாலும், தமிழ்ப் பண்பாட்டில் 24 மனை தெலுங்குச் செட்டியார்களின் வாழ்வியல் முறையும், கலாச்சாரமும் பிரிக்க முடியாத ஒன்றாகி விட்டது. இவர்கள் தங்கள் குல தெய்வமாக காமாட்சி அம்மனை வழிபடுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் ஞாயிறு அன்று காஞ்சியில் இச்சமூகத்தின் சார்பில் ஆராதனை விழா நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு முழுக்க இச்சமூகத்தினர் பரவி இருக்கிறார்கள் என்றாலும் மதுரை, தேனி, திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, இராமநாதபுரம் மற்றும் சென்னை பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு உள்ளனர். இவர்கள் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாடு சாதிகள் பட்டியல்|தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்


திருமண உறவுமுறை மற்றும் குலதெய்வ வழிபாடு

24 மனை தெலுங்குச் செட்டியார்களில் 24 மனை என்பது 24 கோத்திரத்தைக் குறிப்பிடுகிறது. சிலர் வீடு என்றும் குறிப்பிடுவார்கள். இதில் 16 (பதினாறு) கோத்திரங்கள் ஆண் வீடு என்றும் 8 (எட்டு) கோத்திரங்கள் பெண் வீடு என்றும் வகைப்படுத்தபட்டுள்ளன.


24 மனை தெலுங்கு செட்டியார் மனை அல்லது வீடு (கோத்திரங்கள்)

'16 பதினாறு வீடு (ஆண் வீடு)

மனை (குலம்) கோத்திரம்     குல ரிஷி

  1. மும்முடியார்     ஸ்ரீ முகுந்த ரிஷி
  2. கோலவர் (கோலையர்)     ஸ்ரீ குடிலஹு ரிஷி
  3. கணித்தியவர்     ஸ்ரீ கௌதன்ய ரிஷி
  4. தில்லையவர்     தொந்துவ ரிஷி
  5. பலிவிரியர் (பலுவிதியர்)     ஸ்ரீ ஸௌலய ரிஷி
  6. சென்னையவர்     ஸ்ரீ ஹரிகுல ரிஷி
  7. மாதளையவர்     ஸ்ரீ குந்தள ரிஷி
  8. கோதவங்கவர்     ஸ்ரீ கணத்த ரிஷி
  9. ராஜபைரவர்     ஸ்ரீ ரோசன ரிஷி
  10. வம்மையர்     ஸ்ரீ நகுல ரிஷி
  11. கப்பவர்     ஸ்ரீ சாந்தவ ரிஷி
  12. தரிசியவர்     ஸ்ரீ தர்ஷிய ரிஷி
  13. வாஜ்யவர்     ஸ்ரீ வசவ ரிஷி
  14. கெந்தியவர்     ஸ்ரீ அனுசுயி ரிஷி
  15. நலிவிரியவர்     ஸ்ரீ மதஹனு ரிஷி
  16. சுரையவர்     ஸ்ரீ கரஹம ரிஷி

'8 எட்டு வீடு (பெண் வீடு)

மனை (குலம்) கோத்திரம்     குல ரிஷி
  1. மக்கடையர்     ஸ்ரீ மங்கள ரிஷி
  2. கொரகையர்     ஸ்ரீ கௌதம ரிஷி
  3. மாரெட்டையர்     ஸ்ரீ மண்டல ரிஷி
  4. ரெட்டையர்     கௌஷிக ரிஷி
  5. பில்லிவங்கவர்     ஸ்ரீ பில்லி ரிஷி
  6. தவளையார்     ஸ்ரீ கௌந்தைய ரிஷி
  7. சொப்பியர்     ஸ்ரீ சோமகுல ரிஷி
  8. லொட்டையவர்     ஸ்ரீ பார்த்துவ ரிஷி 
 திருமண உறவு

இந்த சமூகத்தினர் 16 வீடு மற்றும் 8 வீடு ஆகிய இந்த இரு பிரிவுகளுக்கிடையே திருமண உறவு வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் 16 (ஆண்) வீட்டைச்சேர்ந்த கோத்திரப் பிரிவினர் தங்களுக்குள் திருமண உறவு வைத்துக் கொள்வதில்லை. அது போல 8 (பெண்) வீட்டைச்சேர்ந்த பிரிவினரும் தங்களுக்குள் திருமண உறவு வைத்துக் கொள்வதில்லை. இதன் காரணம் ஒரே பிரிவில் இருப்பவர்கள் சகோதர உறவாக கருதப்படுவதே ஆகும்.

இச்சமூகத்தின் தலைவர் பெரியதனத்தார், நாட்டாமை, செட்டுமை அல்லது சாதித் தலைவர் என்று அழைக்கப்படுகின்றனர். பல கிராமங்களில் இவர்கள் தலைமையில் இச்சாதியினரின் திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். நகர்ப்புறங்களில் அவ்வழக்கம் கிடையாது.

குலதெய்வ வழிபாடு

24 மனை தெலுங்குச் செட்டியார்களின் குலதெய்வ வழிபாடு கூட அவரவர் கோத்திர அடிப்படையிலேயே அமைந்துள்ளது. ஒவ்வொரு கோத்திரத்தாரும் தங்களுக்குள் ஒரு தெய்வத்தை குலதெய்வமாக ஏற்றுக்கொண்டு, அத்தெய்வத்துக்கு சொந்தமாக ஒரு கோவிலையும் அமைத்துக் கொண்டுள்ளார்கள். பெருங்கோவில்களுக்கும் குலதெய்வ கோவில்களுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் என்னவென்றால், இம்மாதிரி குலதெய்வ கோவில்கள் குறிப்பிட்ட பங்காளிகள் அல்லது குடும்பங்களின் பராமரிப்பில் அவர்களுக்காகவே நிர்மாணிக்கப்பட்டு இயங்கும்.

 அங்காளிகள், பங்காளிகள்

ஒரு கோத்திரத்திற்கு உள்ளே அங்காளிகள், பங்காளிகள் என்று இரண்டு வகையினர் உண்டு. அங்காளிகள் என்றால் அங்கத்துடன் ஒட்டிப் பிறந்தவர்கள், அதாவது கூடப் பிறந்தவர்கள். பங்காளிகள் என்றால் சித்தப்பா பிள்ளைகள், பெரியப்பா பிள்ளைகள், ஒன்றுவிட்ட, இரண்டுவிட்ட என்பார்களே அவர்கள். இதுபோல, அங்காளிகளும், பங்காளிகளும் சேர்ந்து வழிபடுவதுதான் குல தெய்வ வழிபாடு.

ஸ்ரீ காமாட்சி அம்மன்

ஸ்ரீ காமாட்சி அம்மன் அனைத்து 24 மனை தெலுங்கு செட்டியார் கோத்திரத்தாராலும் ஒருமித்த குலதெய்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பண்டை காலத்தில் காஞ்சிபுரம் அருள்மிகு காமாட்சி அம்மன் ஆலயம் 24 மனை தெலுங்கு செட்டியார்ளால் பராமரிக்க பட்ட கோயிலாக இருந்ததற்கு சான்றாக காஞ்சிபுரம் செப்பு ஏடுகளில் செய்திகள் அறியப்படுகின்றனவாம். பிற்காலத்தில் இவர்கள் கோவில் பராமரிப்பு உரிமையை பிற பத்தர்களுக்காக விட்டு கொடுத்து, பிடிமண் எடுத்து வந்து, கரூர் அருகில் அமைந்துள்ள வேஞ்சமகூடல் என்னும் ஊரில் தனி காமாட்சி அம்மன் கோயில் கட்டியதாக வரலாறு! ஸ்ரீ காமாட்சி அம்மனை இன்றும் கூட வேஞ்சமாகூடலில் பக்தர்களுக்கு அருளாட்சி புரிகிறாள்.

 குலதெய்வங்கள்

 திருமால் (பெருமாள்), மகாலட்சுமி, கன்னிமார் மற்றும் அங்காள பரமேஸ்வரி அம்மன் போன்ற தெய்வங்கள் சில கோத்திரத்தவர்க்கு குலதெய்வங்கள் ஆகும். பெரும்பாலும் 24 மனை தெலுங்கு செட்டியார் கோத்திரங்களில் குல தெய்வம் என்பது கடவுளாக இல்லாமல் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களாக கூட இருப்பார்கள்: உதாரணமாக குங்குமகாளியம்மன், சின்னம்மன், பாலாயி, பாப்பாயி, வீரமாத்தியம்மன் மற்றும் பல சிறு தெய்வங்கள்.

 மேல் நிலையாக்கல்

நாட்டு மரபைப் பின்பற்றும் இக்கோவில்களில் தற்போது தீவிரமாக வைதீகமயமாக்கல் நடந்து வருகின்றன. அதன் முறைகளைக் கீழ்க்கண்டவாறு பட்டியலிடலாம்.
1) ஆகம நெறிப்படி கோவிலைக் கட்டுதல்.

2) பலி, சாமியாட்டம், சடங்குகள் போன்ற கூறுகளுடைய நாட்டு வழக்குகள் நிறுத்தப்படல்

3) வழிபாடு, விழாக்களில் வைதீக முறை பின்பற்றப்படல்; வட மொழி மந்திரம் ஓதப்படல்

4) துணைத் தெய்வங்களாக நவக்கிரகங்கள், விநாயகர், சுப்பிரமணியர் போன்ற பெருநெறித் தெய்வ உருவங்களை ஆகம முறைப்படி நிறுவுதல்; கருவறைத் தெய்வ உருவத்தைப் பெருநெறித் தெய்வமாக்கல்

5) கோவில் தொடர்பான பிரயோகங்கள் கூட வைதீக மரபில் கூறப்படல் (அபிஷேகம், நைவேத்தியம், கும்பாபிஷேகம், ஸ்ரீபலி, உற்சவ விக்ரகம், கர்ப்பக் கிரகம் முதலியன)

6) கோவிலின் பூசை செய்பவரைப் பிராமணராக நியமித்தல்

7) கோவிலின் முக்கிய தெய்வத்தின் பழைய கதை மறைக்கப்பட்டு, புராணங்களுடன் தெய்வம் தொடர்பான வரலாறு இணைக்கப்படல்

8) சமயப் பிரச்சாரக் கூட்டங்கள், பட்டி மன்றம், வழக்காடு மன்றம், கருநாடக இசைக் கச்சேரி நடத்தல்

9) பெண்களை ஒரே இடத்தில் கூட்டுவதற்குரிய திருவிளக்கு பூசை முதலியவற்றை நடத்தல்

10) முக்கிய தெய்வத்தை கர்மா, மாயா போன்ற தத்துவார்த்தங்களுடன் இணைத்துப் பேசுதல்.

மேற்கோள்கள்

1. சோழர் காலத்தில் தமிழரின் சமுதாயம் http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=224&pno=327
2. சோழர் காலத்தில் தமிழரின் சமுதாயம் http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=224&pno=325
3. வணிகக்குழு http://www.tamilvu.org/courses/degree/c031/c0314/html/c0314664.htm
4. முதற் குலோத்துங்க சோழன் சுங்கம் தவிர்த்தது ஏன்? http://www.sishri.org/sungam.html

24 மனை தெலுங்கு செட்டியார் திருமணச் சடங்குகள்

24 மனை தெலுங்கு செட்டியார்கள் குல மரபுகள்

24 மனை தெலுங்கு செட்டியார் சமுதாயத்தினர் தந்தை வழியை ஆதாரமாகக் கொண்டு விளங்கும் சமுதாய அமைப்பாகும். 24 மனை அல்லது வீடு என்பன 24 கோத்திரங்களைக் குறிக்கும். முதல் 16 மனைகள் அல்லது வீடுகள் ஆண் கோத்திரங்கள் என்றும், மீதி 8 மனைகள் அல்லது வீடுகள் பெண் கோத்திரங்கள் என்றும் கருதப்படுகின்றன.

16 ஆண் வீடு கோத்திரங்கள்: 1 மும்முடியர் 2. கோலவர் (கோலயவர்) 3. கணித்தியவர் 4. தில்லையவர் 5. பலிவிரியர் 6. சென்னையவர் 7. மாதளையவர் 8. கெந்தவங்கவர் 9. ராஜபைரவர் 10. வம்மையர் 11. கப்பவர் 12. தரிசியவர் 13. வஜ்யவர் 14. கெந்தியவர் 15. நலிவிரியவர் 16. சுரயவர்

8 பெண் வீடு கோத்திரங்கள்: 1. மக்கடையார் 2. கொரஹையவர் 3. மாரட்டையர் 4. ரெட்டையர் (கவலையர் / ரெக்கையர்) 5. பில்லிவங்கவர் 6. தவ்ளையர் 7. சொப்பியர் 8. லொட்டையவர்

ஸகோத்ரத்தில் பெண் எடுக்க/கொடுக்கக் கூடாது

ஆண் கோத்திரங்கள் (16 மனைகள்அல்லது வீடுகள்) சகோதர கோத்திரங்களாகக் கருதப்படுதுவதாலும் (பங்காளிகள்); அது போல பெண் கோத்திரங்கள் (8 மனைகள் அல்லது வீடுகள்) சகோதர கோத்திரங்களாகக் கருதப்படுதுவதாலும், திருமணம் ஆண் கோத்திரத்தைச் சேர்ந்த 16 மனைகள் அல்லது வீடுகளுக்குள்ளோ அல்லது பெண் கோத்திரத்தைச் சேர்ந்த 8 மனைகள் அல்லது வீடுகளுக்குள்ளோ ந்டைபெறாது. எனவே ஆண் கோத்திரத்தார் பெண் கோத்திரத்திலும் - பெண் கோத்திரத்தார் ஆண் கோத்திரத்திலும் திருமணம செய்து கொள்ளும் வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.

வைதீக மரபு சாரா திருமண முறைகள்.

24 மனை தெலுங்கு செட்டியார் திருமண முறைகள் பிறமொழிக் கலப்பு இன்றியே காலங்காலமாய் நிகழ்ந்து வந்தன. சமீப காலங்களிலேயே வேத மந்திரங்களோதி வைதீக முறைப்படி திருமணங்கள் நடைபெறுகின்றன. 24 மனை தெலுங்கு செட்டியார் இனத்தை சேர்ந்த 'செட்டுமைக்காரர்' என்பவர் திருமணத்தை நடத்துவார். செட்டுமைக்காரர் ஆவதற்கு சில சடங்குகள் உள்ளன, அவர் திருமணமானவராகவும் குழந்தை பேறு உள்ளவராவும் இருக்க வேண்டும்.

திருமண முன் ஏற்பாடு

மணமகன் அல்லது மணமகளின் பெற்றோர் தங்கள் மகன் அல்லது மகளுக்கு திருமண வயது வந்தவுடன் திருமணம் செய்வதற்கு ஏற்ப ‘குருபலன்’ வந்துவிட்டதா? என்று தெரிந்து கொள்வர். அந்நாளில் திருமண அமைப்பாளர்கள் அல்லது நிறுவனங்கள் என்று எதுவும் கிடையாது. மணமகன்-மணமகள் வீட்டாரிடையே செய்திகள் பரிமாறிக் கொள்ள இடையில் இருப்பவரை ‘தானாவதிக்காரர் (திருமணத்தரகர்)’ என அழைப்பர். இவர் மூலம் சாதகப் பரிவர்த்தனை நடைபெறும். ஒரு நாளில் நல்ல சகுனம் பார்த்து சாதகம் பொருத்தம் பார்க்கச் செல்லு வார்கள்

சாதகம் பொருந்தி வந்தாலும்கூட குறிப்பிட்ட ஒரு சில குடும்பத்தினர் குலதெய்வக் கோயிலில் ‘பூவாக்கு’ கேட்டோ அல்லது ‘பல்லி சகுணம்’ கேட்டோதான் மேற்கொண்டு செயல் செய்யத் தொடங்குவர்.
நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம் என்பது திருமணம் உறுதி செய்து தாம்பூலம் மாற்றிக் கொள்ளும் முறை. குறிப்பிட்ட நாளில் மணமகன் வீட்டார் மணமகள் வீட்டிற்குச் சென்று திருமணத்தை உறுதி செய்வது மரபு. மணமகள் வீட்டார் வீட்டில் நடைபெறும் நிச்சயதார்த்தம் ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும்.

ஒரு நல்ல நாளில் நிச்சயதார்த்தப் புடவை, நகை, மங்கலப் பொருள்களுடன் மணமகன் வீட்டார் தங்கள் நெருங்கிய சுற்றமுடன் மணமகள் வீடு செல்வர். நிச்சயதார்த்தம் நிகழும் இடத்தில், விருந்தினர்கள் அமர விரிப்புகளும் விரித்து தயாராக இருக்கவேண்டும். இரு வீட்டுப் பெரியவர்கள் மற்றும் செட்டுமைக்காரர் ஆகியோர் முக்கிய பங்கு வகிப்பர். இரு வீட்டாரின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தாம்பூலத் தட்டுக்களையும், வ்ழிபாட்டுப் பொருட்களையும் கிழக்கு முகமாக வைக்கவேண்டும்.

மாத்து விரிக்கப்பட்ட தரையின் இடையில் மங்கலப் பொருள் முன் செட்டுமைக்காரர் அமர்ந்திருப்பார். அவர் முன் எதிர் எதிராக மணமகன் தந்தையாரும் , மணமகள் தந்தையாரும் உறுதி செய்யும் நாள் ஞாயிறு,திங்கள்,வெள்ளி கிழமைகள் எனில் தெற்கு வடக்காகவும், புதன் ,வியாழன் எனில் கிழக்கு மேற்காகவும் அமர்ந்து கொள்வார்கள். மணமகன் வீட்டுச் சார்பில் பெண் கேட்க வந்ததாகக் கூறப்படும். பெண் வீட்டார் சார்பில் சம்மதம் தெரிவித்தபின் மணமகன் தந்தையாருக்கு மணமகள் தந்தையார் மாலை 2 அணிவித்து, பன்னிர் தெளித்து சந்தனம், குங்குமுகம் கொடுத்து தாம்பூலத்தட்டை எடுத்து கொடுக்கவேண்டும் . அவ்வாறே மணமகன் தந்தையார் மணமகள் தந்தையாருக்குச் சிறப்புச்செய்தபின்பு தாம்பூலத்தட்டை எடுத்து கொடுக்கவேண்டும் . இவ்வாறு இரு வீட்டாரும் வெற்றிலை-பாக்கு மாற்றிக் கொள்வர். பின்னர் மணமகன் மற்றும் மணமகள் பற்றிய விவரங்கள், முடிவு செய்த திருமண நாள், நேரம், திருமணம் நடைபெறும் இடம் போன்ற எல்லா தகவல்களும் அடங்கிய முகூர்த்தபட்டோலையை சபையில் அனைவரும் அறிய வாசிப்பார்கள். செட்டுமைக்காரர், பெண் வீட்டு மங்கலப் பெண்களிடம் நீர் விளாவி தூபம் காட்டி மணமகன் வீட்டுத் சீர் தட்டுக்களைக் கொடுப்பார். மணமகன் வீட்டார் கொண்டு வந்த நகையை அணிந்து சேலையை உடுத்தி வெற்றிலை, பாக்கு, மஞ்சள், எலுமிச்சம் பழம் இவைகளை மடியில் கட்டி வந்து சபையில் அமர்ந்து எல்லோரையும் கும்பிடுவாள். அடுத்து மணப்பெண்ணுக்கு, மணமகன் வீட்டார் கொண்டு வந்த சேலை உடுத்தி, நகைகளை அணிவித்து, வெற்றிலை, பாக்கு, மஞ்சள், எலுமிச்சம் பழம் இவைகளை மடியில் கட்டி அழைத்து வந்து திருவிள்க்கிற்கு வடபுறம் கிழக்கு முகமாக உட்கார வைத்து, சபையில் மாலை அணிவிப்பார்கள். மணமகள் பெரியவர்களை வணங்குவாள். மணமகன் வீட்டுப் பெண்கள் எல்லோரும் மணமகளுக்குச் நலுங்கு (சந்தனம் பூசிப் பூ) வைப்பர். நிச்சயம் முடிந்து உறுதியாகும்வரை ஒருவர் வீட்டில் மற்றவர் சாப்பிட மாட்டார்கள். நிச்சயம் முடிந்த பின்பு மணமகள் வீட்டு சார்பில் நிச்சியதார்த்த விருந்து நடைபெறும்.
தாலி – கொம்புத்தாலி / பொட்டுத் தாலி

தமிழ்நாட்டில் தாலி சங்க காலம் முதல் மணமான மகளிரால் அணியப்பெற்று வருகிறது. 24 மனை தெலுங்கு செட்டியார் கலாச்சாரத்தில் திருமாங்கல்யம் அல்லது தாலி முக்கியமானது ஆகும். இவர்கள் திருமணங்களில் தாலி கட்டுவதே முக்கியமான நிகழ்ச்சி ஆகும். இந்த தாலியானது பல வகைப்படுகிறது:

1. பெருந்தாலி, 2. சிறுந்தாலி, 3. தொங்கு தாலி, 4. பொட்டு தாலி, 5. சங்கு தாலி, 6. ரசத்தாலி, 7. தொப்புத் தாலி, 8. உருண்டை தாலி, 9. கருந்தாலி 10. ஜாகத்தாலி, 11. இருதாலி, 12. தாலிக்கட்டி ஆகியவை ஆகும். இதில் காமாட்சியம்மன் தாலியைப் போன்ற சிறிய வட்ட பொட்டுத் தாலி என்பது தெலுங்கு வைணவக் கலாச்சாரத்தையும்; கொம்புத்தாலி அல்லது தொங்கு தாலி (கொம்புத் தாலி நடுவில் இருக்க காசுகள் இருபக்கமும் இருக்கும்) என்பது தமிழ் சைவ கலாச்சாரத்தையும் பின்பற்றி அணிவது மரபு.
மாங்கல்யத்திற்குப் பொன் கொடுத்தல்

திருமாங்கல்யம் சுமங்கலியின் சின்னம் . போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவைகளில் ஒன்று . எனவே நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் மணமகன் வீட்டார் நல்ல நாளில் தீர்க்க சுமங்கலியாக வாழ்வதற்கு மாப்பிள்ளை வீட்டில் வைத்து உரிய நபரிடம் ( பொற்கொல்லர் ) புதிய பொன் கொடுத்து திருமாங்கல்யம் செய்யும் பணியைத் துவக்குதல் என்பது ஒரு முக்கிய சடங்காகும். சில இடங்களில் பொற்கொல்லர் அங்கேயே உலை வைத்துப் பணியைத் தொடங்குவதும் மரபு. நிச்சயதார்த்தம் முடிந்தபின் இரு வீட்டாரும் அமங்கல நிகழ்ச்சிகட்குச் செல்ல மாட்டார்கள்.
முகூர்த்தப் பட்டுப்புடவை எடுத்தல்

இரு வீட்டுப் பெண்களும் சில ஆடவர்களும், கூட்டமாக ஜவுளிக் கடைக்குச் சென்று மணமகளுக்கு மணமகன் வீட்டுச் செலவில் முகூர்த்தப் பட்டுப்புடவை மற்றும் கூறைப்புடவை எடுப்பர். சில குடும்பங்களில் மணமகனுக்குரிய ஆடைகளை மணமகள் வீட்டார் எடுப்பர். மாமன்சீர்மார்காரர், போன்ற சீரோடு தொடர்புடைய அனைவருக்கும் உரியவற்றை எடுப்பர்.
குலதெய்வ வழிபாடு

குலதெய்வம் , மற்றும் இஷ்ட தெய்வ ப்ரார்தனை மற்றும் காணிக்கை முடிதல் என்பது திருமணம் உறுதி செய்யப்பட்ட பின் , இதர திருமண காரியங்கள் தொடங்கு முன் , இறையருள் வேண்டித் தத்தம் குல தெய்வம் இஷ்ட தெய்வங்கட்கு விருப்பம் போல் தொகை காணிக்கையாகப் போட ஒதுக்கி வைப்பது அல்லது உண்டியலில் சேர்ப்பது தெய்வ பக்தியுள்ள குடும்பங்களின் மரபு.
திருமண அழைப்பு

பழங்காலத்தில் திருமண அழைப்புகள் பனை ஓலையில் எழுதப்பட்டது. கிராமங்களில் கணக்கர் என்பவர் பொறுப்பில் திருமண ஓலை முறையாக எழுதப்பட்டது. இன்றைய நாட்களில் திருமண அழைப்பிதழ் அச்சாகி வந்ததும், முதல் அழைப்பிதழை மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் தனித் தனியே தங்கள் குல தெய்வக் கோவில்களுக்கு எடுத்துச் சென்று சமர்ப்பித்த பின்பு ஆணும் பெண்ணும் சேர்ந்து நேரில் சென்று தாய்மாமன், வீட்டு மைத்துனர் மற்றும் மாப்பிள்ளைகளுக்கு பணம் பாக்கு வெற்றிலை (தேங்காய் , பழங்கள் , வெற்றிலை , பாக்கு ,விரலி ம்ஞ்சள் ஆகியவற்றுடன் ரூபாய் பதினொன்று (அல்லது ஒன்றேகால்) மட்டும்) வைத்து அழைப்பது மரபு. பின் உறவினர்களையும் மற்றவர்களையும் நண்பர்களையும் திருமணத்திற்கு அழைப்பது வழக்கம்.
திருமணச் சட்ங்குகள்

24 மனை தெலுங்கு செட்டியார் திருமணச் சட்ங்குகள் மூன்று நாட்கள் நடக்கும். திருமணம் குறிப்பிட்ட முஹூர்த்த நாளன்று பெண் வீட்டிலோ அல்லது இரண்டு வீட்டுக்கும் பொதுவாக ஒரு திருமண மண்டபத்திலோ நடக்கும். வேகமாகச் செல்லும் இயந்திரமயான உலகில் இன்று மூன்று நாள் திருமணம் மிக அருகி வருகிறது. நெருங்கிய உறவினரை அழைத்துக் கோயிலில் திருமணத்தை முடித்து ஒரு மண்டபத்தில் மூன்று மணி நேர வரவேற்போடு திருமணத்தை முடித்து ஒரு மண்டபத்தில் மூன்று மணி நேர வரவேற்போடு திருமணத்தை முடித்து விடுகின்றனர்.
முதல் நாள்

24 மனை தெலுங்கு செட்டியார்கள் இனத்தில் நடைபெறும் முதல் நாள் திருமண நிகழ்ச்சிகளில் வைதீகம் சாராத மிக முக்கியமான சடங்குகள் நடைபெறுவது மரபு.

நாள்விருந்து / சோறாக்கிப் போடுதல்

திருமணத்திற்கு முதல் நாள் நடைபெறும் நாள்விருந்தை சோறாக்கி போடுதல் என்றும் கூறுவர். இந்த நாளன்று மணமக்களின் தாய்மாமன், அத்தை, மாமன்-மைத்துனர்கள், சகோதரிகள் மற்றும் மாப்பிள்ளைகள் போன்ற உறவினர்கள் மணமக்கள் வீடுகளுக்கு வந்து விருந்து வைப்பார்கள். இச்சடங்கு மணமகன் மற்றும் மணமகள் இருவர் வீட்டிலும் நடக்கும். விருந்துக்கு வேண்டிய அனைத்து பொருட்களையும் உறவினர்களே வாங்கி வருவர். திருமணம் இன்று திருமண சத்திரம் அல்லது மண்டபங்களில் நடைபெறுவதால் மணமகன் மற்றும் மணமகள் வீடுகளில் தனித்தனியே பந்தக்கால் நட்டு பந்தல் அமைப்பார்கள். நாள்விருந்தன்றே வீட்டில் பந்தல்காலிடுவார்கள்.
மணப்பெண் புறப்படுதல்

திருமணத்திற்கு முதல் நாளன்று பெண் வீட்டில் பெண்ணிற்கு நீராட்டி (ருது சாந்தி செய்யாத பெண்ணாகில் அன்று அல்லது முந்தைய நாளில் ருது சாந்தி செய்யவேண்டும்), மணப்பெண் போல் அலங்கரித்து மண்டபத்திற்கு அழைத்துச் செல்லவேண்டும். மண்டபத்தில் பெண் அவருக்கென்று கொடுக்கப்பட்ட அறையில் இருக்கவேண்டும்.
மணமகன் புறப்படுதல்

திருமணத்திற்கு முதல் நாளன்று மணமகன் வீட்டைவிட்டுப் புறப்படும் முன் வாசலில் இரு சுமங்கலிப் பெண்கள் ஆரத்தி எடுப்பார்கள். மாப்பிள்ளையோடு தோழன் அவருடன் உற்றார் உறவினர்கள் புடை சூழ திருமணம் நடைபெறும் மண்டபத்துக்கு அருகில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு சென்று மாப்பிள்ளை அழைப்புக்காக காத்திருப்பார்.

மாப்பிள்ளை அழைப்பு

பெண்வீட்டார் மாப்பிள்ளை மற்றும் மாப்பிள்ளை வீட்டாரை பிள்ளையார் கோவிலிலிருந்து திருமண மண்டபத்திற்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மேளதாளத்தோடு வானவேடிக்கையோடு ஊர்வலமாக அழைத்து செல்லுவார்கள். மண்டபத்தின் வாசலுக்கு வந்தவுடன் பெண்ணின் தந்தை அல்லது அக்குடும்பத்தில் வயதில் மூத்தவர் மணமகனுக்கு எதிர்மாலை அணிவித்து வரவேற்கிறார். சில குடும்பங்களில் மணப்பெண்ணின் சகோதரன் அல்லது சகோதர் முறையுடையவர் மாப்பிள்ளையை மாலை சூடி வரவேற்பார். அதற்கு பதில் மரியாதையாக மாப்பிள்ளை மைத்துனனுக்கு மோதிரம் ஒன்றை அணிவிப்பார். இதன் பின் மணப்பெண்ணுக்கு சகோதரி முறையுடைய சுமங்கலிப் பெண்கள் மாப்பிள்ளைக்கு ஆரத்தி எடுப்பர். பின் தோழன், மாப்பிள்ளையின் கைகோர்த்து அவரை வலமாக மண்டபத்துக்கு அழைத்துச் சென்று மணமகன் அறையில் தங்க வைப்பார். மணமகன் மண்டபத்துக்கு வந்தவுடன் தொடங்கும் திருமணச் சடங்கு செட்டுமைக்காரர் தலைமையில் நடைபெறும்.
முகூர்த்தக்கால் போடுதல்

திருமண நாளின் முதல் நிகழ்ச்சி முகூர்த்தக்கால் போடுவதாகும். செட்டுமைக்காரருடன் மூன்று பேர் சென்று பால்மரமான ஆல், அரசு, பாலை, பாச்சான் ஆகிய மரங்களில் ஏதாவது ஒன்றுக்குப் பூசை செய்து முக்கவர் (கிளை) உள்ள சிறு கொம்பை வெட்டி வந்து தோலைச்சீவி மஞ்சள் பூசி வைத்திருப்பர். அதை மணப்பந்தலில் நீர் மூலை அல்லது ஈசானிய மூலை எனப்படும் வடகிழக்கில் பந்தல்காலில் ஆண்களும், பெண்களுகமாக ஐந்து அல்லது ஏழுபேர் பிடித்துக் கொள்ள மாவிலை, மற்றும் மஞ்சள் தோய்ந்த துணியில் வெள்ளி நாணயம், பூ, நவதானியத்தைக் கட்டி செட்டுமைக்காரர் பால் வார்த்துப் பூசை செய்து கட்டுவார்கள். வடகிழக்கு மூலையை "ஈசானதிசை"எனப் போற்றுவர் பெரியோர். ஈசானம் சிவாம்சம் உடைய தேவனுக்குரிய திசை. நடைபெறப்போகும் திருமணம் இறை அருளோடு கூடி மணமக்கள் இன்புற்று வாழவேண்டும் என்பதைக் குறிப்பதாகும்.
அரசாணிக்கால் நடுதல்

முன்காலத்தில் மன்னர்கள் நேரில் வந்து அவர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றதாகவும் ஒரே நேரத்தில் பல திருமணங்கள் நடைபெறும் அளவு மக்கள் தொகை பெருகியதும் அரசன் நேரில் வர இயலாத நிலையில் அரசன் ஆணையை முன்னிறுத்தித் திருமணங்கள் நடைபெற்றிருக்கலாம். அதுவே பின்னர் அரசாணிக்காலாக (அரசு + ஆணை + கால்) மாறியிருக்கலாம். திருமண மேடையில் அரச மரத்தின் கிளை மற்றும் மங்கலப் பானைகள் ஆகிய இரண்டையும் சேர்த்து நடுதல் அரசாணிக்கால் நடுதல் என்றழைக்கப்படுகிறது. மங்கலப் பானை ஒன்றுக்கு ஐந்து வாழ்வரசியார் கூடி நின்று மஞ்சள் குங்குமம், பூ அணிவித்துப் பந்தலின் கீழ்ப்புறத்துக் கால்களுக்கு இடையே நிறைகுடங்களையொட்டி, கெட்டி மேளங்கொட்ட நடுவர். திருமணத்திற்கு இது ஆணிக்கால் எனவே, இதை "அரசாணிக்கால்" என்பர். இது மும்மூர்த்திகளின் அடையாளமாகும்.
முளைப்பாலிகை இடுதல்

நவதானியத்தின் மூலம் நவக்கிரகங்களை சாந்தி செய்வது . முளைப்பாலிகையில் இடப்படும் நவதானியங்கள் வளர்வது போல் குடும்பமும் செழித்து வளரட்டும் என்பதற்கான அடையாளச்சடங்கு. பாலிகையிட்டு வளர்த்து மணவறையின் முன்பு வைப்பது பாலிகை இடுதல் எனப்படும்.

இரண்டாம் (முகூர்த்த) நாள்
மணப்பொங்கல்

மணமகன் மற்றும் மணமகள் வீட்டைச்செர்ந்த ஐந்து வழ்வரசியார்கள் தனித்தனியே மணப்பொங்கல் வைத்து மணப்பந்தலின் கீழ்ப்புறமாக வைத்து தங்கள் குலதெய்வங்களுக்குப் படைப்பார்கள்.
தலைப்பால் தொடுதல்

மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் தனித்தனியே மணமக்களுக்கு தலைக்கு பாலும் நெய்யும் தலையில் வைத்து அதன் பின் புனித நீராடும்படி செய்வார்கள்.
கங்கணம் / காப்புக்கட்டுதல்

மணமக்கள் கிழக்குநோக்கி அமர்தல்: கிழக்கும் வடக்கும் உத்தம திசை என்று போற்றப்படுவன. மாப்பிள்ளையும் பெண்ணும், மண மனையில், பெண் வலம் இருக்கும்படி, அமர்ந்தும், செட்டுமைக்காரர் அரசாணிக்காலுக்கு மஞ்சள் கொம்பு கட்டிய கணுவில்லாத விரலி மஞ்சளை எடுத்து அதை மஞ்சள் தோய்த்த நூலில் கட்டி விநாயகர் முன்பு வைத்து அதற்கு தூப தீபம் காட்டி மணமக்களின் வலது கையில் கட்டி விடுவார். காப்புக் கட்டும் போது கெட்டி மேளம் கொட்டும். திருமணம் இடையூறின்றி நடைபெறச் செய்யும் வேண்டுகோட் செயலிது ஆகும். மங்கல நாண் பூட்டிய பின்னரே இவை அவிழ்க்கப்பெறும்.

நலங்கு

மணநாள் காலை, மணமகனைப் பந்தலில் அமரச் செய்து, பெண் வீட்டு, பிள்ளை வீட்டு வாழ்வரசியார் நலங்கு வைப்பர். பிறகு மணமகளுக்கு அப்படியே நலங்கு வைப்புர். மணமகனை மாப்பிள்ளைத் தோழர் அழைத்து வருவார். மணமகளை தோழி அழைத்துவருவார்.
மெட்டி மாலை அணிவித்தல

திருமண நாள் அன்று காலை முகூர்த்தத்திற்கு முன்னர் பெண்ணின் மாமன்மார்களையும், மாமன் முறையுடைய மற்றவர்களையும் அழைத்து புத்தாடை கொடுத்து விபூதி சந்தனம் அணியச் செய்து மாலை போட்டு மரியாதை செய்வர். மாமா முறையுடைய அனைவரும் இந்தத் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டனர் என்பதை இது குறிக்கும். மணமகன் மற்றும் மணமகள் கால்களில் இரண்டாவது விரல்களில் வெள்ளியினாலான மிஞ்சி அல்லது மெட்டியை அவரவர் தாய் மாமன்கள் மாமன் சீராக கொடுத்து அணிவிப்பார்கள்.
மண ஆடை வழங்கல்

மணமகனை மணப் பந்தலுக்கு மாப்பிள்ளைத் தோழர் அழைத்து வருவார். அவருக்குரிய மண ஆடை, மாலைகளை அவருக்கு வாழ்த்தி வைதிகர் அளிப்பார். இது போல தோழி அழைத்துவர மணமகளும் பந்தலுக்கு வந்து, மண ஆடை மாலைகளைப் பெற்றுச் செல்வார்.
திருமண வேள்வி

அத்தி, ஆல், அரசு, மா, பலா முதலிய மரங்களின் உலர்ந்த சுள்ளிகள் கொண்டு தீ வளர்த்துப் பொங்கழல் வண்ணனாகிய இறைவனை எழுந்தருளச் செய்து வணங்கி வாழ்க்கை வளம் பெற வேண்டுதல் வேண்டும். மேற்கண்ட சுள்ளிகளுக்குரிய மரங்கள் தம் வாழ்நாள் முழுவதும் பல்லோருக்கும் பயன்பட்டுத் தாம் எரிந்து மறையும்போதுகூட தெய்வச் சுடரை எழுப்பி மக்கள் வாழத் திருமணத்தைக் கூட்டி வைப்பதுபோல் மணமக்களின் வாழ்க்கை தங்கள் சுயநலத்திற்காக மட்டுமின்றிப் பல்லோருக்கும் பயன்பட்டு சுழல் ஓம்பலுக்கும் பயன்படும் குச்சிகள் போல இறுதியில் இறை அருளுடன் ஒன்றி நிறைவு எய்துவதாக வேண்டும் என்பது கருத்தாகும்.
திருப்பூட்டுதல்

தாலி வைக்கப்பட்டிருக்கும் தட்டின் ஓரத்தில் சூடம் கொளுத்தப்படும். செட்டுமைக்காரர் விநாயகரை வணங்கித் தட்டை வாங்கி மணமக்களை வணங்கச் செய்து அந்தத் தட்டை பெரியவர்களிடம் ஆசி வாங்குவதற்காக ஒரு பெரியவரிடம் கொடுப்பார். பெரியவர் அவையில் உள்ள அனைவருக்கும் தட்டைக் காட்டுவார் எல்லோரும் வணங்கி ஆசீர்வதிப்பர். முகூர்த்த வேளை நெருங்கினால் தட்டை மணவறை அருகே உயர்த்திக் காட்ட எல்லோரும் இருந்த இடத்திலிருந்தே ஆசீர்வதிப்பர். தட்டிலிருந்து செட்டுமைக்காரர் தாலியை எடுப்பார். எடுத்து கிழக்கு நோக்கி நின்று சூரியனை அல்லது சூரியன் உள்ள திசையில், வணங்குவார். பெண்ணைக் கிழக்கு முகமாகவும், மணமகனை மேற்கு முகமாகவும் நிறுத்தி மாங்கல்ய தாரணம் செய்விருப்பார். மாங்கல்யத்திற்குச் சந்தனம் குங்குமம் வைக்கப்படும். மாங்கல்யம் திருப்பூட்டும்போது சகல வாத்தியம் முழங்கும் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த அட்சதை எனப்படும் மஞ்சள் தோய்ந்த அரிசியை வாழ்த்துக் கூறி மணமக்கள் மீது போடுவர். (அட்சதையை மணமக்கள் அருகில் சென்று அவர்கள் மீது படும்படி போடுவதே முறையானதாகும்).
மாலை மாற்றுதல்

மணமகள் எழுந்து வடக்கு நோக்கி இறைவனை தியானித்து மணமகள் கழுத்தில் மாலை சூட்டுவாள். மணமகள் மணமகளைத் தன் இடப்பக்கத்தில் அமரச் செய்து மாலை சூட்டுவாள். மாலை மாற்றுதலின் பொருள் இருமனம் கலந்து ஒரு மனமாகி இல்வாழ்க்கையை ஆரம்பித்தல். மூன்று முறை மாலை மாற்ற வேண்டும்.
தீவலம் வருதல்

திருநாண் பூட்டுதல் முடிந்த பின் மணமகனது வலதுகைச் சுண்டு விரலையும், மணமகளது இடதுகைச் சுண்டு விரலையும் இணைத்து இருவர் கையையும் பட்டுத் துணியால் சுற்றி மண அறையைச் தீவலம் வரச் செய்வர். இப்போது இணையும் கைகள் வாழ்நாள் முழுவதும் பிரியாமல் இருக்க வேண்டும் என்பது இதன் பொருள். சிலப்பதிகாரம் ‘காதலர்ப் பிரியாமல் கவவுக்கை நெகிழாமல்’ என்று கூறும். சுண்டு விரலில் தான் இதய நாடி ஓடுகிறது என்பர். இரு இதயங்களும் ஒன்றுபட்டன என்பது இதன் பொருள். பின் மண மக்கள் மாலை மாற்றிக் கொள்வர்.
அம்மி மிதித்து அருந்ததி காட்டல்

அம்மியைக் கழுவிச் சுத்தம் செய்து விபூதி, சந்தனம், குங்குமம் இட்டு வைத்திருப்பர். மணமகள் தன் வலது பாதக் கட்டை விரலை அம்மியில் வைப்பாள். அம்மி போல் உறுதியாகக் கற்புத் தன்மையைக் காப்பேன் என்பது இதன் பொருள். அருந்ததி சப்தரிஷிகளில் ஒருவராகிய வசிட்டர் மனைவி. மும்மூர்த்திகளும் அவள் கற்புத் தன்மையைச் சோதித்தும் நிலை குலையாது இருந்தவள். அருந்ததி பார்ப்பது என் கணவனைப் பிரியாமல் இருப்பேன் என்று மணமகள் உறுதி ஏற்பதாகும். அருந்ததியை வடமீன் துருவ நட்சித்திரம் என்பர். எப்பொழுதும் அது வடக்கிலேயே இருக்கும்.
பாத பூசை

மணமகனும், மணமகளும் தங்கள் பெற்றோர்கட்குப் பாத பூசை செய்வர். பாதங்களை நீர் தெளித்துக் கழுவி விபூதி, சந்தனம், குங்குமம் இட்டு வழிபடுவர்.
தாரை வார்த்தல்

மணமகனின் வலது கைமேல் மணப்பெண்ணின் இடது கையை வைத்து ஒரு பணம் வைத்துப் பெண்ணின் பெற்றோர் தன் உறவினர்கள் முன்னிலையில் தன் கையால் தண்ணீர் விட்டுத் தாரை வார்ப்பார்கள். பெண் வீட்டார் கொடுத்தோம் என்று சொல்ல மணமகன் வீட்டார் கொண்டோம் என்று சொல்லுவார்கள். இனி மணமகள் பாதுகாப்பு மணமகனுடையதே என்பதை அறிவிக்க நடக்கும் சடங்காகும். தாரை வார்க்கும் நீரில் பொன் வைத்து வழக்கம். ‘தங்களுக்குத் தாங்கள் தாரைக்கோர் பொன் கொடுத்து’ என்கிறது மங்கல வாழ்த்து.
பால்பழம் கொடுத்தல்

பால், வாழைப்பழம் கலந்து மணமகள் முதலில் மணமகனுக்கு மூன்று முறை கொடுப்பார். பின் மணமகன் மணமகளுக்கு மூன்று முறை கொடுப்பார். நாயகன் நாயகி உணவு கொள்ளல் மறைவில் செய்யவேண்டும் என்பதால் திரை ஒன்று முன்னால் பிடிக்கப்படும். முதன் முதலில் தம்பதிக்களுக்குக் கொடுக்கும் இனிப்புப் பதார்த்தமாகையால் வாழ்க்கை இனிமையாக இருக்கவேண்டும் என்று உணர்த்தவே இச்சடங்கு.
காப்புக் களைதல்

மணமக்களின் கைகளில் கட்டப்பட்ட காப்புக்களை அவிழ்த்து பவித்திரங்களை கழற்றி அவற்றுடன் பெற்றோரின் பவித்திரங்களையும் வெற்றிலையில் வைத்து வைதிகரின் தட்சணையும் சேர்த்து வைதிகரிடம் கொடுக்கவேண்டும்.
மணமக்கள் வரவேற்பு / சடங்குகள் (புகுந்த வீடு)

நல்ல நேரம் பார்த்து மணமகன் விட்டுக்குப் மணப்பெண்ணை முதலில் மணமகன் வீட்டார் அழைத்துச் செல்வர். பெண்ணுடன் அவள் சகோதரி அண்ணி போன்றோர் உடன் செல்வர். பெண்ணின் உடன் செல்லும் பிறந்த வீட்டு துணைகள் அவளுக்கு பிறந்த வீட்டு ஏக்கம் வராமலிருக்கவும், புகுந்த வீட்டு மனிதர்களிடம் இயல்பாக ஏற்படும் பயத்தைப் போக்கவும் உதவி செய்வார்கள் என்பது எதிர்பார்ப்பு.

புகுந்த வீட்டில் மணமக்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பார்கள். வலது காலை எடுத்து வைத்து தம்பதிகள் வீட்டுக்குள் நுழைவார்கள். புகுந்த வீட்டில். பெண் தான் புகுந்த வீட்டில் முதன்முதலில் பூஜை அறையில் விளக்கேற்றுவாள். பின்பு சமையலறையில் பால் காய்ச்சுவாள். வீட்டில் திருவிளக்கு முன்பு தம்பதியரை அமர்த்தி பாலும் பழமும் கொடுக்க வேண்டும்.
சாந்தி முகூர்த்தம்

பெரும்பாலும் முதலிரவு திருமணம் ஆன அன்றே நடத்தப்பட்டு விடுகிறது. அன்று மாலையில் மணமக்களை அருகிலுள்ள பிள்ளையார் கோவிலுக்கு அழைத்து செல்லுவார்கள். மணமக்கள் தங்கும் அறையை நன்கு அலங்கரிக்கவும் . பால் , பழங்கள், ம்ற்றும் இனிப்பு வகைகளுடன் திருவிளக்கு ஏற்றி வைக்கவும். மணமகளை , மணமகனின் சகோதரி அழைத்து வருவாள்.
மூன்றாம் நாள்

சம்பந்தம் கலக்கல்

நல்ல நாள் பார்த்து நாள் பின் பெண்ணை மறுவீடு அழைத்து வர மணமகள் வீட்டார் புகுந்த வீடு செல்வர். திருமணக் கூட்டத்தில் நெருங்கிய உறவினர்களை அறிமுகம் செய்து வைக்க நேரம் இருக்காது. எனவே திருமணம் முடிந்து இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கட்கு மட்டும் விருந்தளிக்கப்படும். இது ‘சம்பந்தம் கலக்குதல்’ எனப்படும். குலதெய்வக் கோயில்கட்கும், உள்ளூர் கோயில்கட்கும் மணமக்களோடு சென்று பொங்கல் வைத்து பூசை செய்து வழிபடுவர். உறவினர் வீடுகளுக்கு விருந்துண்ண செல்வர். சீர் செய்த சகோதரி இல்லம் சென்று சிறப்புச் செய்வர்.
தாலி பெருக்கம்

திருமணம் முடிந்த மூன்றாவது மாதம் ஒரு நல்ல நாளில் நல்ல நேரம் பார்த்து பெண்ணை திருவிள்க்கின்முன் அமர்த்தி , ம்ஞ்சள் நூலில் கோர்த்து இருக்கும் திருமாங்கல்யத்தை மாப்பிள்ளைவீட்டார் அணிவித்த தாலிசங்கிலியில் அல்லது புதிய மஞ்சள் கயிற்றில் தாலியை மாற்றி காசு குண்டு இணைத்து கோர்க்க வேண்டும். இந்த சடங்கை முதிர்ந்த சுமங்கலி பெண் செய்து கொடுப்பது உத்தமம். தாலி பெருக்கம் செய்யும் பொழுது மாப்பிள்ளை முன் இருக்கக்கூடாது.